Thursday, November 13, 2014

ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு உதவும் அனலிடிக்ஸ்(Ecommerce Web Analytics) - The Hindu

வெப் அனலிடிக்ஸ்: 


டேட்டா அனலிடிக்ஸ்(Data Analytics) குறித்து கேட்க, படிக்க, சிந்திக்க எல்லாம் நன்றாகவே இருக்கின்றது. இதில் சொல்லப்படும் பல விஷயங்கள் கற்பனைக்கு எட்டாதவையாக இருக்கின்றன. உபயோகங்களும் உபத்திரவங்களும் சரிசமமாக இருக்கும் போல் இருக்கின்றது. பாதிக்கும் பாதி கனவும் கற்பனைக் கதையும் போல் அல்லவா இருக்கின்றது. இதனால் நிஜத்தில் இன்றைக்கு பலனடையும் மனிதர்கள் மற்றும் நிறுவனங்கள் ஏதும் இருக்கின்றதா? என்ற கேள்வி உங்கள் அனைவரின் மனதிலும் தோன்றியிருக்கும். இது பற்றிய உதாரணங்களை இந்த வாரம் பார்ப்போம்.

விளம்பரங்களால் பயன் உண்டா?


நிறுவனங்கள் பெரும்பாலும் விளம்பரம் மற்றும் இன்டர்நெட்டில் பெரிய அளவில் பாப்புலராகவும் தங்களைப்பற்றியும் தங்களுடைய தயாரிப்புகள் பற்றியும் முழுமையான விவரங்கள் இணையதளங்களிலும், சோசிஷியல் வெப்சைட்களிலும் இருப்பதை விரும்புகின்றன. இதற்கான செலவினங்கள் மிகவும் அதிகமாக இருக்கும். அதிலும் உலகளாவிய வியாபாரத்தில் இருக்கும் நிறுவனங்கள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. இந்த மாதிரியான செலவுகளைச் செய்கின்றோமே? இதனால் என்ன பலன் என பல நிறுவனங்களும் யோசிக்கவே செய்கின்றன.

கடுமையான போட்டியும் லாபக் குறைவுகளும் இருக்கும் கால கட்டத்தில் மிகப்பெரிய அளவில் கம்பெனி நிர்வாகங்கள் இது போன்ற செலவுகளைச் செய்வதற்கு முன்னால் சிந்திக்கின்றன. செய்கின்ற செலவுக்கும் அதனால் வரும் பலனுக்கும் சம்பந்தம் இருக்கின்றதா என யோசிக்கின்றன. இது போன்ற சிந்தனைகள் தோன்றும் போது அனலிடிக்ஸ்தனை ஒரு ப்ரொபஷனல் சரிவீஸாக வழங்குகின்ற சர்வீஸ் நிறுவனங்களுக்கு வேலை கிடைக்கின்றது.

அனலிடிக்ஸ் தரும் தகவல்


இவ்வளவு பணம் நாங்கள் எங்களுடைய இன்டர்நெட் தளங்கள், சோஷியல் மீடியா நெட்வொர்க்குகள் மற்றும் ப்ரொமோஷன்களுக்காக செலவு செய்கின்றோம். இதனால் என்ன பிரயோஜனம் என்பதை கொஞ்சம் ஆராய்ந்து சொல்லுங்கள் என இந்த நிறுவனங்கள் பணிக்கப்படுகின்றன. இந்த அனலிடிக்ஸ் சர்விஸ் நிறுவனங்கள் இணையதளத்திலும் சோஷியல் நெட்வொர்க்கிலும் வந்து கம்பெனியின் ப்ராடெக்ட் மற்றும் சர்விஸ் குறித்து அறிந்துகொள்பவர்களின் விவரங்களை சேகரிக்க ஆரம்பிக்கின்றன.
இந்த விவரங்களையும் கம்பெனியின் பில்லிங் விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களிடம் சாமான் வாங்கிய இத்தனை பேர் உங்கள் வெப்சைட் மற்றும் சோஷியம் மீடியா விவரங்களை வைத்தே உங்களை வந்தடைந்தனர் என்று சொல் கின்றனர். இன்னமும் தெளிவாக இந்த வியாபாரத்தை செய்தவர்களில் இத்தனை பேர் உங்களுடைய இன்டர்நெட் ப்ரொமோஷன் மூலமாக மட்டுமே வந்தவர்கள் என்பதையும் புட்டுப்புட்டு வைத்துவிடுகின்றன. இதனால் நிறுவனங்கள் தாங்கள் இணையத்திற்காக செய்யும் செலவு நியாமானதுதானா? அந்த செலவிற்கான பலாபலன் வந்து சேர்கின்றதா என்பதை தெரிந்துகொள்கின்றன.

சரியாக கணிக்க…


இணையதளம் என்று மட்டுமில்லை. ஏனைய மீடியாக்களிலும் களத்திலும் செய்யப்படும் ப்ரொமோஷன்களில் ஏற்படும் குழப்பத்தை தீர்க்கவும் அனலிடிக்ஸ் பல நிறுவனங்களுக்கு உதவுகின்றது. காலையில் பேப்பரை திறந்தால் வாங்கீட்டீங்களா? என விளம்பர வருகின்றது. டீவியைப் போட்டால் இப்போது விற்பனையில் என்கின்றது. ஆபீஸ் போகும் போது எப்ஃஎம் ரேடியோ கேட்டால் சரக்கு உள்ள வரையே ஆஃபர் என்கின்றது. நேராக கடைக்குப் போய் பார்த்தால் ஓ அந்த விளம்பரத்தை பார்த்து வந்தீர்களா? அது புது ஸ்டாக். இன்னும் வரலை இல்லை அது வந்த உடன் தீர்ந்து போய் விட்டது என்று வெறுப்பேற்றி போட்ட விளம்பரத்தை நீர்த்துப்போக செய்துவிடுவார்கள் கடைக்காரர்கள்.

விளம்பரமும் அதனால் ஒரு ஏரியாவில் உருவாகும் டிமாண்டும் சரியாக கணிக்கப்பட வேண்டும். அப்படி கணிக்கப்பட்டால் மட்டுமே விளம்பரத்தினால் பலன் இருக்கும். இல்லாவிட்டால் தண்டச் செலவுதான். சரக்கு கடையில் இல்லாமல் விளம்பரத்தை நீட்டி முழக்கி என்னப் பயன். ஒரு வருஷம் அல்லது ஒரு சீசனில் இந்தத் தவறு நடந்தால் பராவாயில்லை. தொடர்ந்து ஓவ்வொரு சீசனிலும் இதே தவறு நடந்தால் என்னவாகும். கம்பெனியின் பெயர் கெட்டு குட்டிச்சுவராகும். இந்த இடத்திலும் அனலிடிக்ஸ் உதவுகின்றது.
கடந்த சிலவருடத்தில் நடத்தப்பட்ட விளம்பர கேம்ப்பெயின் எந்த அளவுக்கு டிமாண்டை அந்த நாட்களில் அதிகரித்தது என அனலிடிக்ஸின் மூலம் ஆராயலாம். அதற்கு ஏற்றாற்போல் கடைகளுக்கு ஸ்டாக்கை அனுப்பி விட்டு பின்னர் விளம்பரம் செய்யலாம். இந்தவகை உபயோகத்திலும் அனலிடிக்ஸ் இன்றைக்கு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.

வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்


அடுத்த நாம் பார்க்கப்போவது மற்றுமொரு ஆன்லைன் உதார ணத்தை. ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் ஏகப்பட்ட விற்பனை யாளர்களை தங்களுடன் இணைத்துக் கொண்டு இயங்கி வருகின்றது. மறுபக்கம் எக்கச்சக்கமான வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கு கின்றனர். விற்பனையாளர்கள் சிலர் வாடிக்கையாளரை ஏமாற்றலாம். இரண்டு நாட்களில் தருகின்றேன் என்று சொல்லி இருபது நாள் ஆக்கலாம். செல்போன் என்று சொல்லி செங்கலை அனுப்பி விடலாம்.

இது ஒரு புறம் என்றால் வாடிக்கையாளர்களும் வீண் பிரச்சினை செய்யலாம். ஆயிரத்து ஐநூறு ருபாய்க்கு போன் ஆர்டர் போட்டு விட்டு அதில் கேமரா சரியில்லை. பேட்டரி பத்துநிமிடம்தான் நிற்கின்றது. ராங் நம்பருக்கு கால் போகின்றது என பொய்யான புகார் களை அளந்துவிடலாம்.

விற்பனயாளரானாலும் சரி, வாடிக்கையாளரானாலும் சரி யார் பொய் சொன்னாலும் அலப்பறை கொடுத்தாலும் கெடுவதென்னவோ ஆன்லைன் விற்பனை நிறுவனத் தினுடையதுதானே! நியாயமற்ற முறையில் வியாபாரம் செய்யும் விற்பனையாளரையும், சம்பந்தா சம்பந்தம் இல்லாத குறைகளைச் சொல்லும் வாடிக்கையாளரையும் கண்டுபிடித்து கழற்றிவிட்டால் வியாபாரம் ஸ்மூத்தாய் போகும் இல்லையா? இதில் அனலிடிக்ஸ் மிகவும் உதவுகின்றது.

தப்பான பொருள், வாரக்கணக்கில் தாமதம், ஏமாற்றுப்பேர்வழி என ஒரு விற்பனையாளரை குறித்து கம்ப்ளெயிண்ட் வருகின்றதா? வெறுமனே தண்டிக்காமல் ஒரு ஏரியாவில் இருந்து மட்டும் வருகின்றதா? ஒரு குடெளனில் இருந்து செல்லும் பொருட்களுக்கு மட்டும் வருகின்றதா? ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் தயாரிப்புகள் விற்கப்படும் போது வருகின்றதா? என்றெல்லாம் அனலிடிக்ஸ் பிரித்துமேய்ந்து தகவல்களைச் சொல்லிவிடும்.
பொதுவாக விற்பனையாளர் நல்லவரா? கெட்டவரா? அல்லது அவருடைய நிறுவனத்தில் இருக்கும் சில கருப்பு ஆடுகள் இந்தவிதமான பிரச்சினையை செய்கின்றதா? அதே ரகத்தில் தரத்தில் நம்முடன் இணைந்திருக்கும் வேறு விற்பனையாளர்கள் தரும் சேவையை விட இவர் தரும் சேவை குறைந்த ரகமா? அதிகமா? என்ற கேள்விக்கெல்லாம் அனலிடிக்ஸ் பதில் தந்துகொண்டிருக்கின்றது.

ஏனென்றால் ஒரு வகையான பொருட்கள் விற்பனை செய்யும் பல விற்பனையாளர்களின் தொழில் குணாதிசியமே அப்படி இருக்கப்போய் நிறைய விற்று அதனால் கம்ப்ளெயிண்ட்டும் அதிகம் வந்து ஹைலைட் ஆவதால் நம்முடன் இணைந்திருக்கும் நல்ல ஒரு நிறுவனத்துடன் தொடர்பை துண்டித்துக்கொள்ளக்கூடாது இல்லையா? தொழிலின் குணாதிசியமே அப்படி இருந்தால் இந்த நிறுவனம் போன பின் அடுத்த நிறுவனமும் அதே போன்ற கம்ப்ளெயிண்டிற்கு ஆளாகத்தானே செய்யும். எனவே நல்லது கெட்டதை தெரிந்துகொள்ள அனலிடிக்ஸ் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களுக்கு அனலிடிக்ஸ் பெரிய அளவில் தற்போது உதவுகின்றது.

வாடிக்கையாளரையும் அறியலாம்


புடிச்சு ஜெயில்ல போடணும் சார் இவங்களை என விற்பனையாளர்களை பார்த்து கம்ப்ளெயிண்ட் சொல்லும் வாடிக்கையாளர் எல்லோருமே நல்லவர்களா என்ன? கேஷ் ஆன் டெலிவரி போட்டு சுத்தலில் விடுவது, பொருளை வாங்காமலேயே இது ஒரு வேலைக்காகாத சரக்கு என பின்னூட்டம் போடுவது, குண்டூசியை வாங்கிவிட்டு இமயமலை அளவுக்கு கம்ப்ளெயிண்ட் எழுதுவது என வாடிக்கையாளர்களும் பலவகைதானே.

இதுபோன்ற சிறப்பு வாடிக்கையாளார்களை கண்டறிந்து எக்ஸ்கியூமீ – உங்களுக்கு சப்ளை செய்யும் அளவுக்கு எங்களிடம் ஸ்டாக் இல்லை என்று கஸ்டமருடைய பேக்ரவுண்டை ஆராய்ந்துவிட்டு இணையதளத்தை அதுவாகவே சொல்ல வைக்கும் அளவுக்கு அனலிடிக்ஸ் பின்புலத்தில் இருந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. ரொம்ப சவுண்ட் விடும் பார்ட்டிகளை ப்ளாக் அவுட் செய்யும் டெக்னாலஜியும் நடப்பில் இருக்கின்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

No comments:

Post a Comment