Wednesday, February 4, 2015

இணைய வணிகத்தில் வேலை தயார்! - தி இந்து

இணைய வணிகம் வேலை வாய்ப்புக்கள் :



இணைய வணிகம் சூடுபிடித்திருக்கும் காலம் இது. இணையதள வசதி கொண்ட கணினி வழியே நடத்தப்படும் இந்த இணைய வணிகத்தில் தற்போது இந்தியர்கள் பலர் நுகர்வோராக இருக்கிறார்கள். கூடிய விரைவில் நம் இளைஞர்கள் இணைய வணிகம் நடத்தும் நிறுவனங்களில் ஊழியராகவும் மாறுவார்கள் என்கின்றனர் வணிக உலக ஜாம்பவான்கள்.

கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேருக்கு இணைய வணிக நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கு முக்கியக் காரணம், நகர்ப்புறம் மட்டுமின்றி புறநகர் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும் இணைய வணிக வசதியை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இணைய வணிகத்தின் வீச்சு 2015-ல் இன்னும் 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்நாப் டீல், ப்லிப் கார்ட், அமேசான் போன்ற பெரு நிறுவனங்கள் முழு மூச்சாக இணைய வணிகத்தில் இறங்கியதால், அத்துறையில் பணியாளர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.

தொழில்நுட்பப் பிரிவு, டிஜிட்டல் சந்தையை நிர்வகித்தல், கிடங்குகளை நிர்வகித்தல், பேக்-ஆபீஸ் வேலைகள் உள்ளிட்ட தளங்களில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் இருக்கும் என மனிதவளத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

உலகின் முதல் 10 பணி அமர்த்தும் துறைகளில் இணைய வணிகத் துறை வெகு சீக்கிரம் இடம் பெறும் எனும் எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.